Search
Close this search box.

இணையா இணையம்

நேற்று!
நான் மாணவனாக…
ஏதோ வரிசையில்…
என் வகுப்பறையில்
என் ஆசானின்
சில குறிப்புகளுக்கு…
விடையறியாப் பித்தனாய்!
ஈரடியில் அவர் அறை…
ஈராயிரம் யோசனைகளுக்கு அப்பால்…
விடையாய்!
எனக்கு நண்பனாய்! (தோழியாய்!)
சிலருக்குச் சகோதரனாய்! (சகோதரியாய்!)
பலருக்குத் தந்தையாய்! (தாயாய்!)
எனும் கனவுகளுடன்!
இன்று
என் வகுப்பறையில்…
நான் ஆசானாய்!
சுண்ணக்கட்டியில் சூத்திரம்
பழகவந்தேன் கரும்பலகையில்…
என் மாணவன்!
எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
என் தோள்கள் இருந்தன…
தொடர்புக்குப்
பத்து இலக்க எண்கள்
காற்றின் அலைவரிசையில்…
ஆனால்
என் சில குறிப்புகள்
இயங்கலையில்…
சிலரின் முகவரியைத் தேடி
புலனதில் புதைந்தது…
என்
மாணவர்களின் கருத்துக்கு
ஏங்கிய என் மனம்…
இன்றும்!
பொதுத்தேர்வின் முடிவு நாளைப் போல்!

காதலியின் கண்சிமிட்டலுக்காகத் தவிக்கும்
காதலன் போல்!!
உவமையைத் தேடும் கவிஞன் போல்!!!
நான் மட்டும் அல்ல
என்னைப் போல் பல ஆசான்கள்…
நாளை
என் வகுப்பறையில்
ஜன்னலோர வருடும் காற்று…
கீச் கீச் சத்தமிடும் மேசைகள்…
விரல் நடுவில் கறைப்படிந்த சுண்ணக்கட்டி…
கற்பனையில்…
உயிரற்ற இரு பெட்டிக்குள்
உயிருள்ள முகங்கள்
உரையாடிக்கொள்ளும்
உயிரோட்டம் அல்லாமல்…
இவை வரிகள் அல்ல புரிதல்…


இப்படிக்கு
என்றும் மாணவனாய்
தா. கேப்டன் பிரபாகரன்
உதவி பேராசிரியர்
கணிதத்துறை
எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி நிறுவனம்)
காட்டாங்குளத்துர்.

Share